By J.Selva Antony Santosh
ஜோ.செல்வ அந்தோணி சந்தோஷ்
வெற்றி என்பது வெளியே இருப்பதல்ல;
அது உங்களுக்குள் இருப்பது !
சரித்திரம் படைக்கப்படும்- நீங்கள்
உங்கள் வரலாற்றை தெரிந்திருக்கும்போது;
அது மேலும் விவரிக்கப்படும்- பிறர்
உங்கள் சரித்திரத்தை அறிந்திருக்கும் போது;
செய்யும் தொழிலில் முதன்மை- அதுவே
சாதனையின் உண்மையான உடைமை !
இதையறிந்தவர் என்றும்
இருப்பார் முன்னால்-
அறியாதவர் என்றும் இருப்பார்
பின்னால் !
அறிந்தும் செயல்படுத்தாதவர்
இவ்வுலகில்….
என்றும் இருப்பார்-
வெறும் மண்ணாய்….
வியர்வையை வெறுப்பவர் மனிதரல்ல;
வியர்வையில் உருகுபவரே
மனிதர்.
வலிகளை வெறுப்பவர்
வெற்றியாளர் அல்ல….
வலிகளோடு வாழ்பவர்
வெற்றியாளர் - வலிகளை
வெல்பவரே சாதனையாளர் !
உயர்ந்தாலும் ஏச்சும்-
தாழ்ந்தாலும் ஏச்சும்-
இவ்வுலகம்: அதை
நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் !
பின்னாளில் அவ்வுலகம் உங்களை
கொண்டாடும் !உங்களை புரிந்துகொள்ள
யாருமில்லை என்ற ஏக்கம்
வந்தாலே நீங்கள் வெற்றி பெற
தகுதியானவர் !
நீங்கள் வலிகளை தாங்கினால்
வெற்றி வரும் உங்கள் பின்னால்!
பின் , புகழ் பெறுவீர்கள்
இவ்வுலகின் முன்னால் !
அப்பொழுது நீங்கள்
ஆணவத்தால் திண்டாடக்
கூடாது !
மன உறுதி, மன அமைதியால்
இவ்வுலகை வென்று விட
பிறந்துள்ளீர்கள் நீங்கள் !
வழிகாட்டி ஏன் வேண்டும்
உங்களுக்கு ? இவ்வுலகை
வழிகாட்ட பிறந்துள்ளதே
நீங்கதானப்பா !
என்னால் முடியாது
என்பது
வெட்டியாக இருப்பது !
என்னால் முடியும் என்பது
சாதிப்பது ! என்னால் முடிகின்றது
என்பதே தற்போது சாதிக்கின்றது!
வாழ்க்கை என்னும் கையை
நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் !
வேறு யாரும் உங்கள் கையை
தூக்கிவிட மாட்டார்கள்- அவ்வளவு சீக்கிரமாய் !
எனவே,
கைரேகையை நம்பாதீர்கள் !
உங்கள் கையை நம்புங்கள் !
உங்கள் மூளையின் படி
செயல்படுங்கள் - உங்கள்
இதயத்தின் படி வாழுங்கள் !
தோல்வி என்பது தற்காலிகத் தடையல்ல;
அது உங்களது வருங்கால சாதனை !
வெற்றி என்பது தற்காலிகப் புதிரல்ல ;
அது தற்காலிகச் சாதனை !
ஒரு தடவை வெல்வது எதுவும்
சரித்திரம் ஆவதில்லை - வெற்றி
பெற்றுக் கொண்டே இருக்கும்போது
மட்டுமே அது சரித்திரம் ஆகும் !
கடவுளை அடைவதே நம்
வாழ்க்கையின் இலக்கு !
அதனால்,
கெட்டதை விலக்குவோம் !
நல்லதை பெருக்குவோம் !
உங்கள் தொழிலில் முதன்மையானவராய்
இருந்தால் அடைவீர்கள் அக்கடவுளை !
மனத் தூய்மை , வெற்றியின் போதும்,
வெற்றிக்குப் பிறகும் சாந்தம்,
இடைவிடாத பெரும் முயற்சி,
இறை நம்பிக்கை, அன்பு இவைகள்
இருப்பவர் மட்டுமே இவ்வுலகில்
புகழுடம்பாக வாழ முடியும் !
மேலுலகு பொது நலவாதிக்கு !
கீழுலகு சுய நலவாதிக்கு !
ஆனால்,
இப்பூவுலகு இருவருக்குமே இல்லை !
அதனால், பயம் கொள்ளாதீர்கள் எதற்கும் !
அனைவரும் வாழ்வில் வெற்றி பெற எனது பிராத்தனைகள் உங்களோடு இருக்கட்டும்!
By J.Selva Antony Santosh
Comments