By Jagathisan P
பன்னீர் துளியாய் நன்னீர் தூவி
பகலும் இரவும் பார்த்து சிரித்து
நன்னாள் பொன்னாள் எந்நாளிலுமே
நறுமணம் வீசும் நாளெலாம் பேசும்
கண்ணை சிமிட்டும் வண்ண பூக்கள்
காலன் உயிரினை கவர்ந்தது கண்டு
மண்ணை நோக்கி தலை தாழ்த்தி தன்
மடலின் மீது கண்ணீர் பெய்தது
காலை எழுந்ததும் கால்நடை பயிற்சியில்
கடமை தவறாதுடன் நடைபயிலும்
வேலை முடித்து வீடு வந்ததும்
வீட்டில் இருந்து வெளியில் வந்து
வாலை ஆட்டி வரவேற்கும் நாய்
வாசல் நுழைந்து வந்தவர் எல்லாம்
மாலை போட்டிட மாண்டவர் கண்டு
மாளாத் துயரில் மயங்கி சரிந்தது.
மண்ணை விட்டு மறைந்து விட்டாலும்
மாயத்தோற்றம் பெற்ற நம் முன்னோர்,
அன்னை, தந்தை ஆவியாய் வந்து
அமாவாசை ஒவ்வொரு மாதமும்
அன்னம் கொண்ட அண்டங் காக்கை
இல்லத்ததரசன் மாண்டது கண்டு
கண்ணீர் வழிய தலையைகவிழ்த்து
கவலையில் உறவை அழைத்திட கரைந்தது
சேற்றை திருத்தி செவ்விளம் தென்னை
நாற்றை நட்டு நல்லுரம் நன்னீர்
ஊற்றிக் காத்தவர் உயிரை இழந்த
உடலை சுமக்க ஓலையை தந்து
ஈற்றில் இதற்கா இலை வளர்த்தேன் என
ஏக்கம் மேலிட இடவலம் அசைந்து
தேற்றிக்கொள்ள தெரியாமல் தொடும்
காற்றை கிழித்து காட்டுது துயரினை.
அன்னம் தந்தவர் அடைக்கலம் தந்தவர்
ஆடை அணிகலன் அளித்து மகிழ்ந்தவர்
கண்ணம் கிள்ளி கனிவை சொன்னவர்
கல்வி கூடம் தனிலுடன் பயின்றோர்
முன்னும் பின்னும் கானா உறவினர்
முதியவர் இளையவர்ர் இவருடன் கூட
இன்னும் பலரும் இரங்கல் சொல்லிட
இல்லம் வந்தனர் இறுகிய முகத்துடன் .
கன்றாய் இருந்த காலம் தொட்டு
காலை மாலை இரவு எந்நேரமும்
சென்றால் வந்தால் சேர்ந்தே இருந்து
சிறகில்லாமல் வானில் பறந்து
ஒன்றாய் கழித்த காலம் எல்லாம்
ஓவென சிரித்த பொக்கை வாய்கள்
நன்றாய் மூடிக்கொண்டே பழைய
நாட்களை எடுத்து மெல்லத் தொடங்கின
By Jagathisan P
Comments